திருப்பதி:
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரம் தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்தது. சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் உள்பட 4 மாவட்டங்கள் கடுமையான சேதமடைந்தது.
இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக மாறியது. இதற்கு ஜாவத் புயல் என பெயரிடப்பட்டது.
இந்த புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒரிசா அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் புயல் திசைமாறி மேற்கு வங்கத்தை நோக்கி சென்றது. இதனால் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. தொடர் மழையால் விசாகப்பட்டினத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
விசாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. ஆர்.கே. கடற்கரை சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு விரிசல் உருவாகியுள்ளது. மேலும் கடல் அரிப்பு காரணமாக அங்கிருந்த சிறுவர் பூங்கா சுற்றுசுவர் இடிந்து விழுந்தது.
இதையடுத்து கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரையில் திடீர் விரிசல் ஏற்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.