ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டம் அமிஸ்ஜிபுரா பகுதியை சேர்ந்த போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபீர் அகமது.
இவர் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பயங்கரவாதிகள் திடீரென போலீஸ் அதிகாரி சபீர் அகமது மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் காயமடைந்த அவர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய 3-வது தாக்குதல் சம்பவம் இதுவாகும். கடந்த சனிக்கிழமை தெற்கு காஷ்மீரில் உள்ள ஹசன்போரா பகுதியில் நடந்த தாக்குதலில் 53 வயதான அலி முகமது கனி என்ற போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்ரீநகர் அருகே நடந்த தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் காயமின்றி உயிர் தப்பினார்.