இந்தியா

கூட்டுறவு வங்கி மோசடியை கண்டித்து அணிவகுப்பு: நடிகர் சுரேஷ் கோபி மீது வழக்கு

பேரணியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் உள்பட 500 பேர் மீது திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் கடன் மோசடி நடந்தது. இதில் ஏராளமான தனிநபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையினரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் நடந்த இந்த மோசடி சம்பவத்தை கண்டித்து நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சுரேஷ் கோபி தலைமையில் கடந்த 2-ந்தேதி பேரணி நடைபெற்றது. கருவண்ணூரில் இருந்து திருச்சூர் வரை நடந்த இந்த பேரணியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த பேரணியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் உள்பட 500 பேர் மீது திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.