மீட்பு குழுவினருடன் பாபு 
இந்தியா

நன்றி சொல்ல உங்களுக்கு... வார்த்தை இல்ல எனக்கு... பாபு எமோஷனல் பேட்டி

கேரளாவில் 3 நாட்களாக மலை பாறை இடுக்கில் சிக்கிய தன்னை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு முத்தம் கொடுத்து பாபு நன்றி தெரிவித்தார்.

கேரளாவின் மலம்புழா, சேரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23).

பாபுவுக்கு மலையேறுவதில் ஆர்வம் அதிகம். இதனால் அவர் நேற்று முன்தினம் மாலையில் 2 நண்பர்களுடன் பாலக்காட்டை அடுத்த குரும்பாச்சி மலைக்கு சென்றார்.

3 பேரும் மலையேறினர். சிறிது தூரம் சென்ற போது பாபு கால் இடறி கிழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் திடீரென மலையில் இருந்து தவறி விழுந்தார்.

கீழே விழும்போது மலையில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை பிடித்து கொண்டதால் பாபு ஒரு பாறை இடுக்கில் மாட்டி கொண்டார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் பாபுவை மீட்க முடியவில்லை. அதற்குள் இரவாகி விட்டதால் நண்பர்கள் செய்வதறியாது தவித்தனர்.

பாபு இருந்த பாறை பகுதியை மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் டிரோன் கேமிரா மூலம் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே குன்னூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரும் அங்கு வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். பாபு சிக்கி இருந்த பாறை பகுதியில் ஹெலிகாப்டரால் தாழ்வாக பறந்து செல்ல முடியவில்லை. இதனால் அவர் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டர் அங்கிருந்து திரும்பி சென்று விட்டது.

அதனை பார்த்த நண்பர்கள், பாபு சிக்கி இருக்கும் இடம் குறித்த தகவலை மீட்பு குழுவினருக்கு தெரிவித்தனர்.

பாபு சிக்கி இருக்கும் இடத்தை அவர் அனுப்பிய செல்பி படம் மூலம் அறிந்து கொண்ட மீட்பு படையினர் அவரை மீட்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த பணியில் ராணுவ வீரர்களின் உதவியையும் கோரினார்.

இதையடுத்து மலையேறும் பணியில் அனுபவமிக்க ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் பாபு சிக்கி இருக்கும் பாறை பகுதிக்கு அருகில் சென்று விட்டனர். அங்கு இருந்தபடி பாபுவுக்கு அவர்கள் தகவல் அனுப்பினர். விரைவில் அவரை மீட்டு விடுவோம் என்றும் அவருக்கு தகவல் அனுப்பினர்.

இன்று 2-வது நாளாக அவரை மீட்கும் பணி நடந்து வருகிறது. பாபுவை கண்டுபிடித்து விட்டதால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு விடுவார் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

அதன்படி இன்று காலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் 2 பிரிவாக அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் பாபு இருந்த பாறை இடுக்கிற்கு சென்றனர். அங்கிருந்து அவரை கயிறு கட்டி பத்திரமாக கீழே இறக்கினரர்.

பாறையில் இருந்து மீட்கப்பட்டதும் அவரை ராணுவத்தினர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாபு உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவரது உறவினர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதனிடையே, 3 நாட்களாக மலை பாறை இடுக்கில் சிக்கிய தன்னை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு முத்தம் கொடுத்து பாபு நன்றி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்...  எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: 'WHO' எச்சரிக்கை