இந்தியா

மதுபோதையில் தொட்டிலில் தூங்கிய குழந்தையை கொன்ற தந்தை

ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம் ஊத்தூலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நிர்மலா தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் நிர்மலா தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு வந்த ரமேஷ் வெளியே சென்று மது குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எட்டி உதைத்தார்.

இதனால் குழந்தை தொட்டிலில் இருந்து வெளியே வந்து சுவற்றில் மோதி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.

இதனை கண்டு சிறிதும் வேதனை அடையாத ரமேஷ் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். நிர்மலா கதறி அழும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரமேசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.