இந்தியா

ஆந்திராவில் எம்.எல்.சி. கார் மோதி மாணவர் பலி

அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விஜயவாடா, படமடா ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் உள்ளார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக லட்சுமணன் இரவு நேரங்களில் பைக் டாக்ஸி ஓட்டி வந்தார்.

லட்சுமணனும் அவரது நண்பரும் நேற்று பைக் டாக்ஸியில் பானு நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். சீனிவாச ராவ் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் சீனிவாச ராவை மீட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் வந்த வாலிபர்கள் சிலர் காரில் ஒட்டப்பட்டு இருந்த எம்.எல்.சி. ஸ்டிக்கரை கிழித்து எடுத்துச் சென்றனர்.

கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

காரை ஓட்டி வந்தவர் அவரது உறவினர் ஜமீல். அவர் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் காரில் 2 மது பாட்டில்கள் இருந்தன.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது எம்எல்சி யின் கார் இல்லை. ஜமீலின் சகோதரி ஷேக் நாகினாவின் கார் என தெரிவித்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமீலை கைது செய்தனர்.