இந்தியா

திருப்பதி கோவிலில் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் தரிசன வரிசையை மாற்ற தர்மாரெட்டி முடிவு செய்தார்.

திருப்பதி:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கொடி மரத்தை தாண்டியதும் கோவிலுக்குள் நுழையும் வரிசையில், மகா துவார நுழைவு வாயில் ஆகிய இடங்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தள்ளுமுள்ளுவில் சிக்கி அவதி அடைந்து வந்தனர்.

தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையான் அருகே வரிசையில் செல்லும் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய விடாமல் இழுத்து தள்ளினர்.

இதுகுறித்து முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் மாதந்தோறும் டயல் யுவர் என்ற நிகழ்ச்சியின் போது பக்தர்கள் அதிக அளவில் புகார் தெரிவித்தனர்.

பக்தர்களின் தரிசன வரிசையை மாற்ற தர்மாரெட்டி முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி கோவிலுக்குள் செல்லும் பக்தர்களை மொத்தமாக அனுப்ப மறுத்தனர். கொடி மரம் அருகே ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வருகின்றனர். பக்தர்களிடையே தள்ளுமுள்ளு இல்லை.

அதேபோல் தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை இழுத்து தள்ளும் நிலையும் மாற்றப்பட்டு உள்ளது.

இதனால் சாதாரண பக்தர்கள் கூட பொறுமையாக தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 4500 பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 75,227 பேர் தரிசனம் செய்தனர். 33,706 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.