அலகாபாத் ஐகோர்ட்டு 
இந்தியா

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை தள்ளி வையுங்கள் - அலகாபாத் ஐகோர்ட்டு வேண்டுகோள்

ஒமைக்ரான் வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பொதுக்கூட்டங்களை பெரிய அளவில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அலகாபாத்:

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிபூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த வழிவகை செய்யும் வகையில் உத்திரபிரதேச சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அலகாபாத் ஜகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி கருத்து தெரிவித்தபோது, தேர்தல் ஆணையத்திற்கு சில வேண்டுகோள்களை விடுத்தார். அவர் கூறியதாவது:-

ஒமைக்ரான் வைரஸ் பரவுவதால் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை தள்ளிவைப்பது பற்றி பரிசீலிக்கலாம். இது தொடர்பாக பிரதமரும், தலைமைத் தேர்தல் ஆணையமும் உரிய ஆலோசனை நடத்த முடிவுகள் எடுக்க வேண்டும்.

அதுவரை உத்தரபிரதேசத்தில் அரசியல் கட்சிகள் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.ஒமைக்ரான் வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பொதுக்கூட்டங்களை பெரிய அளவில் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

3-வது அலை உருவாகாமல் இருக்க வேண்டுமானால் அரசியல் கட்சிகள் ஊர்வலம் நடத்துவதை தவிர்த்து ஒத்துழைக்க வேண்டும். எங்கு வாழ்க்கை இருக்கிறதோ அங்குதான் நம்பிக்கை இருக்கும்.

எனவே மக்கள் நலனில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். பெரிய அளவில் தொண்டர்களை ஒன்று திரட்டுவதை கைவிட்டு தொலைக்காட்சிகள் வாயிலாக பிரசாரத்தை மேற்கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தலை சற்று தள்ளிவைப்பதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். நாடு முழுவதும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தி உள்ளது. அதே பாணியில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேர்தலை தள்ளிவைக்க பிரதமர் ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - கோயம்பேட்டில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கம்

SCROLL FOR NEXT