திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் நடிகையை கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரியை நடிகர் திலீப் மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.இதில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கிடைக்குமா? என்று தெரியவரும்.
இதற்கிடையே நடிகர் திலீப்பின் செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு கேட்டபோது அவர் கொடுக்க மறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு, நடிகர் திலீப் அவரது செல்போன்களை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி திலீப்பும் தனது 6 செல்போன்களை கோர்ட்டில் ஒப்படைத்தார். அந்த போன்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த செல்போன்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக அவரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கும் நிலையில் போலீசார் அவரை காவலில் எடுக்க திட்டமிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.