நடிகர் திலீப் 
இந்தியா

நடிகர் திலீப்பின் செல்போன்களை விசாரணைக்கு கேட்டு போலீசார் மனு

விசாரணையின் போது நடிகர் திலீப் செல்போன்களை ஒப்படைக்கவில்லை என போலீசார் ஐகோர்ட்டில் தெரிவித்த நிலையில் அவரது 6 செல்போன்களும் நேற்று கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பலாத்காரம் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.மேலும் இச்சம்பவத்திற்கு சதி திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து போலீசார் நடிகர் திலீப் மீது புதிய வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க நடிகர் திலீப், முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, திலீப்பிடம் போலீசார் 3 நாள் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

விசாரணையின் போது நடிகர் திலீப், அவரது செல்போன்களை ஒப்படைக்கவில்லை என போலீசார் ஐகோர்ட்டில் தெரிவித்தனர்.

இதையடுத்து திலீப், அவரது செல்போன்கள் அனைத்தையும் ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி திலீப், தனது 6 செல்போன்களை கோர்ட்டில் ஒப்படைத்தார்.

இந்த போன்கள் அனைத்தையும் வழக்கு விசாரணை நடைபெறும் ஆலுவா கோர்ட்டில் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று இரவு 7.30 மணிக்கு திலீப்பின் 6 செல்போன்களும் ஆலுவா கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த போன்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே போலீசார் கூறியிருந்தனர். எனவே அவர்கள் 6 செல்போன்களையும் விசாரணைக்கு வழங்க கேட்டு ஆலுவா கோர்ட்டில் மனு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே நடிகர் திலீப் மீதான முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஐகோர்ட்டில் நடக்க இருக்கிறது.