இந்தியா

முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாடே அணையைக் கட்டலாம்; கேரளம் முழு செலவையும் ஏற்கும் - முதலமைச்சர் சதீசன்!

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் வி.டி.சதீஷன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சிலின் 31வது கூட்டம் இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை தவிர்த்து மற்ற தென்மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் செயல்பட்டார். கூட்டத்தில் காவிரி விவகாரம் முதல் நீட், தொகுதி மறுவரையறை என பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினார்.

அந்தவகையில் தங்கள் தரப்புப் பிரச்னைகளை முன்வைத்து கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் பேசினார். அதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரமும் அடங்கும். முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக பேசியுள்ள சதீஷன் அணையின் அமைவிடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான செலவுகளை கேரளா ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அணைக்கட்டியப் பிறகு தமிழ்நாட்டிற்கு உரிய முழுப்பங்கு நீரையும் கேரளம் திறக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பழைய அணையின் பாதுகாப்பு குறித்த கேரள மக்களின் அச்சத்தைப் போக்க, இரு மாநிலங்களும் இணைந்து கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.