டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியங்களில் H1N1 இன்ஃப்ளூயன்சா (பன்றிக் காய்ச்சல்) பாதிப்பு இந்த பருவமழைக் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வெறும் 229 ஆக இருந்த H1N1 பாதிப்புகள், இந்த ஆண்டு '1,344' ஆக உயர்ந்து கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியின் முன்னணி மருத்துவமனைகளின் வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் 7 முதல் 10 நோயாளிகள் வரை H1N1 அறிகுறிகளுடன் சேர்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலத்தில் ஏற்படும் திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் வைரஸ் கிருமிகள் வேகமாகப் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. கடந்த ஆண்டு டெல்லியில் H3N2 வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு H1N1 டைப்-ஏ (Influenza A) வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு, கோவிட்-19 மற்றும் வழக்கமான சளி-காய்ச்சல் அறிகுறிகளும் H1N1 அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், தொடக்கத்தில் பலர் இதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 4 நாட்களுக்குள் பின்வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.
*திடீர் அதிக காய்ச்சல்: தணியாத காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் கூடிய குளிர்.
*சுவாசப் பிரச்சனைகள்: தொடர் வறட்டு இருமல், தொண்டை வலி, மூக்கு அடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல்.
*உடல் உபாதைகள்: கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மிகுந்த உடல் சோர்வு.
*செரிமான பிரச்சனைகள்: குறிப்பாக குழந்தைகளிடம் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.
பெரும்பாலோருக்கு இந்நோய் 3 முதல் 5 நாட்களில் தானாகவே சரியாகிவிட்டாலும், பின்வரும் பிரிவினருக்கு இந்நோய் நுரையீரல் அழற்சி அல்லது தீவிர மூச்சுத்திணறலாக மாற வாய்ப்புள்ளது.
•முதியவர்கள் & குழந்தைகள்: 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள்.
•நாட்பட்ட நோயாளிகள்: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள்.
•கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுவதால் இவர்களுக்கு ஆபத்து அதிகம்.
•குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்: புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்.
கீழ்க்கண்ட தீவிர அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும்:
* மூச்சு விடுவதில் சிரமம் அல்லது கஷ்டப்பட்டு மூச்சு வாங்குதல்.
* நெஞ்சுப் பகுதியில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம்.
* உதடுகள், நகங்கள் அல்லது சர்மம் நீல நிறமாக மாறுதல் (ஆக்ஸிஜன் குறைபாடு).
* சளியில் ரத்தம் வருதல் அல்லது காய்ச்சல் குறையாமல் 5 நாட்களுக்கு மேல் நீடித்தல்.
* அதிகப்படியான மயக்கம் அல்லது குழப்பமான நிலை.
•சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
•இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் 2-3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும்.
• மருத்துவரின் பரிந்துரை இன்றி தானாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது; ஏனெனில் H1N1 என்பது ஒரு வைரஸ் தொற்று.
•ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் ஆண்டுதோறும் போடும் 'Flu Vaccine' தடுப்பூசியை எடுத்துக்கொள்வது தீவிர பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.