Suresh Gopi
இந்தியா

கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி!

ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டிற்கு சென்றார் மத்திய மந்திரி சுரேஷ்கோபி.

கேரளம் மாநிலம் திருச்சூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய மந்திரியுமான சுரேஷ்கோபி, மிக எளிமையான தனது செயல்பாட்டால் பலரையும் ஈர்த்து வருகிறார்.

அதனை நிரூபிக்கும் வகையில் ஆலப்புழாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆலப்புழா நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு தனியார் நிறுவன திறப்பு விழாவில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர், தனது கார் வராததால் சிறிது நேரம் காத்திருந்தார். இருப்பினும் அவருக்கான அதிகாரபூர்வ வாகனம் வரவில்லை.

ஆட்டோவில் பயணம் - பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி:

இதனால் சிறிதும் கவலை கொள்ளாத அவர், அந்த வழியாக வந்த ஆட்டோவை அழைத்து அதில் ஏறி பயணம் செய்தார். இதனை கண்ட அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்சி அடைந்தனர். "கார் விரைவில் வந்து விடும்" என அவர்கள் கூறினர். இருப்பினும் மத்திய மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் தனது பயணத்தை தொடர்ந்தார்.

பாதுகாப்பு வாகனங்கள் - டிரைவருக்கு ரூ.1000:

இதனை தொடர்ந்து அந்த ஆட்டோவிற்கு பாதுகாப்பு அளித்து பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. இதனை கவனித்த உள்ளூர் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டிற்கு சென்ற மத்திய மந்திரி சுரேஷ்கோபி, ஆட்டோவில் இருந்து இறங்கியதும், டிரைவருக்கு ரூ. 1000 கொடுத்துச் சென்றார்.

திருவனந்தபுரம் பயணம்:

பின்னர் அவர் முன்னாள் எம்.பி.ஆரிப்பை சந்தித்து பேசினார். அப்போது அவரது அதிகாரப்பூர்வ வாகனம் வந்தது. பின்னர் அதில் ஏறி அவர் ஆலப்புழா ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து வந்தேபாரத் ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.

இதற்கு முன்பும் இதே போன்ற அனுபவம்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவில் அருகிலும், ஹரிப்பாட்டில் உள்ள மன்னாரசாலை கோவிலில் பங்கு கொண்ட நிகழ்ச்சிகளிலும் மத்திய மந்திரி சுரேஷ்கோபிக்கு இது போன்ற அனுபவம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் விளக்கம்:

இதற்கிடையில் மத்திய மந்திரிக்கான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. மராரியில் உள்ள ஓட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர் பயணம் செய்வதற்காக, ஒரு வழிகாட்டி வாகனமும் ஒரு துணையாளரும் வழங்கப்பட்டிருந்தனர்.

ஆனால் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அதிகாரப்பூர்வ கார் ஜவுளிக் கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.

கடையிலிருந்து வெளியே வந்த மத்திய மந்திரி கார் அருகில் இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றார்" என தெரிவித்தனர்.