அமைதியான போராட்டத்தில் லத்திகளால் தடியடி நடத்தியிருக்க கூடாது என ஜூலை 20 அன்று டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.
அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.
ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே ஜூலை 20 அன்று பேரணி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான மிதமிஞ்சிய தாக்குதலை விசாரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
இதன்போது பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்தி போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காகவே அவர்கள் மீது போலீசார் லத்திகளால் தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, "சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், அமைதியான போராட்டத்திற்கு வழிவகை செய்யும் வகையிலான நாடு தழுவிய ஒரே மாதிரியான வழிமுறையை வரையறுக்க வேண்டியது அவசியம்.
அமைதியான முறையில் போராடுவதற்கு அரசியலமைப்பு அனுமதி அளிக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவை மறுக்கப்பட கூடாது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது என்பதற்காக போலீசார் எல்லைமீறி மிதமிஞ்சிய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது.
போராட்டம் நடத்தினாலே தடியடி நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது. அப்படி அத்துமீறப்பட்ட சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
அமைதியான போராட்டங்களை நடத்த முறையான இடம் ஒதுக்கீடு செய்து தருவது உள்ளிட்ட சில நெறிமுறைகள் அவசியமானது. இத்தகைய தருணங்களில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது" என தெரிவித்தார்.
அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஜோய்மாலா பேசுகையில், "போராட்டங்களின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அரசின் கடமை" என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.