இந்தியா

விமான நிலையங்களில்கூட நாய்கள் கடிக்கும் நிலைமை - உச்சநீதிமன்றம் கருத்து

ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்த வேண்டும். கருத்தடை, தடுப்பூசி போன்ற நடைமுறைகளை முறையாக செயல்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை, தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கக் கூடாது என்ற உத்தரவில் திருத்தங்கள் கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு கூறியதாவது:-

தெரு நாய் கடிகள் என்பதை மறுக்கவே முடியாது. ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தெரு நாய் கடிகள் தொடர்ச்சியாக அதிகரித்திருப்பதை காண்கிறோம். 2026 தொடங்கி இந்த நான்கு மாதங்களுக்குள்ளாக 2 லட்சம் தெரு நாய் கடி சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. நாய் கடியால் சிறுவர்கள், முதியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மருத்துவமனைகள், விமான நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், நகர்ப்புற மையங்கள் போன்றவற்றில் நாய் கடி சம்பவங்கள் நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் மீண்டும் நாய் கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் கூட ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பயணி சூரத் நகரில் தெரு நாய் கடிக்கு உள்ளாகி இருக்கிறார். இவ்வாறான தொடர் நிகழ்வுகள் மூலம் விலங்குகள் நலவாரிய விதிமுறைகள் உரிய முறையில் செயல்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கருத்தடை, தடுப்பூசி விதிமுறைகளை முறையாக அரசுகள் செயல்படுத்தவில்லை. இதனால் தற்போதைய பிரச்சனைகள் அதிகரித்தன. நாய்கள் பெருக அது காரணமாகியது. நாய்கள் கடிக்கும் புகார் அதிகரித்துள்ளன. சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமாக உள்ளது.

விமான நிலையங்களில் கூட நாய்கள் கடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் இருந்து நாய்களை பிடித்து நீக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. நாடுமுழுதும் தெரு நாய்களை கட்டுப்பத்த உரிய நடவடிக்கையை அனைத்து மாநில அரசுகளும் எடுக்க வேண்டும். நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும். உரிய தடுப்பூசி நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுவெளியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும். முந்தைய உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விலங்குகள் நல மையங்களை ஏற்படுத்த வேண்டும். கருத்தடை, தடுப்பூசி போன்ற நடைமுறைகளை முறையாக செயல்படுத்த வேண்டும். இந்த உத்தரவுக்கு ஏற்ப உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் தேசிய நெடுஞ்சாலை துறை இணைந்து செயல்பட வேண்டும். நெடுஞ்சாலைகளில் நாய்கள் அலைந்து திரிவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை உரிய தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் இந்த தீர்ப்பை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.