இந்தியா

தலைமை தேர்தல் ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!

ஞானேஷ் குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே ஒருதலைப்பட்சமாக தலைமைத் தேர்தல் ஆணையரை இடைக்காலப் பணியிடை நீக்கம் செய்ய முடியாது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும் ஞானேஷ் குமார், அமைப்பின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஏகமனதான ஒப்புதலை பெறாமல் ஒருதலைப்பட்சமாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் படிவம்-6 மாறுதல்கள் தொடர்பாக மற்ற ஆணையர்களின் கருத்துக்களைப் புறக்கணித்து முடிவெடுத்ததாகக் கூறி, அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்காலத் தடை

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி பாக்கி மற்றும் நீதிபதி மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே ஒருதலைப்பட்சமாக தலைமைத் தேர்தல் ஆணையரை இடைக்காலப் பணியிடை நீக்கம் செய்ய முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெளிவான விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்ற அமர்வு முறைப்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தேர்தல் ஆணையம் வெளிப்படையான முறையில் தனது பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT