இந்தியா

மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

களத்தில் போதிய தயார்நிலை இல்லாதபோதிலும், சிபிஎஸ்இ சுற்றறிக்கையானது ஜூலை 1 முதல் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது.

நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, எந்த இடைக்கால தடையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘களத்தில் போதிய தயார்நிலை இல்லாதபோதிலும், சிபிஎஸ்இ சுற்றறிக்கையானது ஜூலை 1 முதல் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது’ என்று வாதிட்டார்.

மேலும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, "பாடப்புத்தகங்கள் கூட கிடைக்கவில்லை’ என தெரிவித்தார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றொரு மனுவில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த விவகாரம் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஒருவரின் மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளிட்ட முக்கியமான அரசியலமைப்புச் சட்டக் கவலைகளை எழுப்புகிறது” என்று வாதிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “மொழி என்பது தனிமனித விருப்பம் சார்ந்த விஷயம்; அதை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது” என்று குறிப்பிட்டதுடன், இந்த மும்மொழிக் கொள்கை கூட்டாட்சி அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, “இந்தத் கட்டத்தில் நீதிமன்றம் கூட்டாட்சித் தத்துவம் சார்ந்த அம்சங்களை ஆராயவில்லை; மாறாக, பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் பாடப்புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் போன்ற அமலாக்கம் தொடர்பான பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்தது.

விசாரணையின் போது, மத்திய அரசுக்காக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக அவசர இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார்.

மேலும் இந்த கொள்கையின் அமலாக்கமானது உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளுக்கு உட்பட்டதுதான் என்பதால், இந்த விவகாரத்தை அவசரப்படாமல் பின்னர் விரிவாக விசாரிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

புதிய சிபிஎஸ்இ விதிமுறை என்ன?

தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, 2026 ஜூலை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் மாணவர்கள் 3 மொழிகளைப் படிக்க வேண்டும்; அதில் குறைந்தது 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். ஆங்கிலம் போன்ற வெளிநாட்டு மொழிகளை 3-வது அல்லது கூடுதல் மொழியாக மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

அடுத்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மீது, திடீரென கூடுதல் மொழிகளைத் திணிப்பது கடுமையான கல்விச் சுமையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.