தலைநகர் டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதையும் உலுக்கிய 2012ஆம் ஆண்டின் 'நிர்பயா' வழக்கோடு தற்போதைய நிலையை ஒப்பிட்டு உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி, நொய்டாவில் ஸ்லீப்பர் பேருந்து ஒன்றில் ஏறிய 16 வயது சிறுமி, அப்பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சினையைத் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் முக்கிய கருத்துகளை தெரிவித்தது.
நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு இன்றைய வழக்கு விசாரணையில்,
"டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பொது நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளால் கடுமையான குறைபாடு ஏற்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்கள், போதிய வெளிச்சமின்மை மற்றும் முறையான கண்காணிப்பு அமைப்புகள் இல்லாததால் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
வெறுமனே ஆதரவை தெரிவிப்பது மட்டும் போதாது. இதுபோன்ற குறைபாடுகளில் முறையான நடவடிக்கை அவசியம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டங்களுக்குக் காரணமான ' நிர்பயா' சம்பவத்தைப் போன்ற சூழ்நிலைகளை நோக்கியே மீண்டும் நிலைமைகள் நகர்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குற்றவியல் சட்டங்களில் கடுமையான திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், குற்றவாளிகள் எவ்வித அச்சமுமின்றி அட்டூழியங்களை மீண்டும் செய்து வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கு குறைபாடு உள்ளது என்பதை ஆராய்வது அவசியம்.
பாதுகாப்பு தரநிலைகளை கடுமையாகச் செயல்படுத்த தேவையான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்தனர்.
23 வயது மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.