இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு கடுமையான அல்லது பிடியாணை நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 1-ம் தேதி தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் அக்ஷத் திரிபாதிக்கு ரூ.5 லட்சம் பிணைப்பத்திரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தெளிவான உத்தரவையும் மீறிச் செயல்பட்ட கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதியின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
கௌதம புத்தா பல்கலைக்கழக மாணவர் அக்ஷத் திரிபாதி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பின் போராட்டத்தில் மாணவர்களைப் பங்கேற்கத் தூண்டியதாகவும், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதாகவும் நொய்டா காவல்துறையினர் அறிக்கை அளித்திருந்தனர். இதன் அடிப்படையில், கிரேட்டர் நொய்டா நிர்வாக நீதிபதி செப்டம்பர் 4 அன்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், அமைதியை நிலைநாட்ட ரூ.5 லட்சத்திற்கான தனிப்பட்ட பிணைப்பத்திரத்தையும், தலா ரூ.5 லட்சத்திற்கு இரு நபர் உத்தரவாதத்தையும் ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏற்கனவே அமலில் இருந்ததாலும், நொய்டா காவல்துறையின் விசாரணையில் அந்தத் தகவல் தவறானது என்றும், நோட்டீஸ் அனுப்பப்பட்ட காலத்தில் மாணவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரில் இருந்தார் என்றும் தெரியவந்ததையடுத்து, அந்த நோட்டீஸ் அடுத்தநாளே திரும்பப் பெறப்பட்டது.
இந்த விவகாரத்தை மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா, தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் முறையிட்டார். மாணவர்கள் மீது எந்தவிதக் கட்டுப்பாடோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று செப்டம்பர் 1-ல் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்ததை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் வாதிட்டார்.
முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி சூரிய காந்த், "எங்கள் உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்ப ஒரு நீதிபதிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எந்தவொரு மாணவருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம். உச்சநீதிமன்ற உத்தரவை மீற எந்தவொரு நீதிபதிக்கும் அதிகாரமில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மாணவர் மீதான நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக இருந்தும் மாநில நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் நோட்டீஸின் நகலை நீதிமன்றப் பதிவேட்டில் தாக்கல் செய்யுமாறு மனுதாரரின் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.