இடஒதுக்கீடு மூலம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்மட்டத்தை எட்டிய குடும்பங்களுக்கு ஏன் இடஒதுக்கீடு சலுகை நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறிய கிரீமி லேயரில் இருந்து விலக்கு கோரிய மனுவை நீதிபதி பி.வி. நாகரத்னா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது.
இதன்போது பேசிய நீதிபதிகள், " மாணவர்களின் பெற்றோர் நல்ல வேலைகளில் இருந்து கொண்டு, நல்ல வருமானம் ஈட்டினாலும், அவர்களின் பிள்ளைகள் மீண்டும் இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.
ஒரு தலைமுறை உயர்மட்டத்தை அடைந்த பிறகு, அடுத்த தலைமுறையின் தகுதிகள் குறித்து கண்டிப்பாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.
பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள்
இந்த வழக்கை பொறுத்தவரை பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களது பிள்ளைகளுக்கு இன்னும் ஏன் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்?
கல்வியறிவு மற்றும் பொருளாதார அதிகாரம் கிடைக்கும்போது, சமூகத்தில் அவர்களின் அந்தஸ்து தானாகவே மாறிவிடுகிறது.
ஒருமுறை கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் சமூக மாற்றம் ஏற்பட்ட பிறகும், அவர்களின் பிள்ளைகளும் மீண்டும் இடஒதுக்கீடு கோரினால், இந்த அமைப்பிலிருந்து நாம் ஒருபோதும் வெளியே வர முடியாது.
EWS
அதேநேரம் பொருளாதாரத்தில் பிந்தங்கிய பிரிவு இடஒதுக்கீடு (EWS) முற்றிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதாகும்.
அதில் சமூக ரீதியாக பின்தங்கிய நிலை என்ற கோணம் கிடையாது" என்று குறிப்பிட்டனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் அந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.