நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் இளைஞர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை குறித்த மனுக்கள் , பீகாரில் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை சுட்ட காவல் அதிகாரி மீதான ஆர்ஜேடி எம்.பி மனோஜ் ஜா உடைய மனு ஆகியவற்றை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
இதன்போது, டெல்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் பிற மாநிலங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டங்களில் பங்கெடுத்த மாணவர்கள் மீது பதியப்பட்ட எப்ஐஆர்களை வைத்து எந்த கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது. கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க வேண்டும்.
அதேநேரம் குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,டெல்லியில் மாணவர்கள் மீதான போலீசாரின் மிதமிஞ்சிய பலப்பிரயோகம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படலாம் என்ற வகையிலும் உச்சநீதிமன்றம் மறைமுகமாக தெரிவித்துள்ளது.
தாக்குதலை ஈடுபட்டதாக காவல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போராட்டங்கள் அதிகம் ஒடுக்கப்பட்ட, மகாராஷ்டிரா, பீகார், அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், " இதில் நிச்சயமாக முற்றிலும் சுதந்திரமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். யாரெல்லாம் சட்டத்தை கையில் எடுத்து அத்துமீறி செயல்பட்டார்களோ அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் விசாரணை வீண்" என தெரிவித்தார்.
இதற்காக, சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள், பாடி கேமராவில் பதிவான காட்சிகள், தொலைத்தொடர்பு கருவிகள், போராட்டத்துடன் தொடர்புடைய பிசிஆர் பதிவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பட வேண்டும் என்றும், காவல்துறை தன்வசம் வைத்துள்ள போராட்டம் நடத்தியவர்கள் குறித்த அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.