வந்தே மாதரம் பாடலை பாடாததற்கான தண்டனை விளைவுகள் அரசியலமைப்பின் 25, 26-வது பிரிவுகளின் கீழ் உள்ள மதச்சார்பற்ற தன்மை, மத சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மீறுகிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. தேசியப் பாடல் என்ற அந்தஸ்து ஏற்கப்பட்டாலும், மத்திய அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அந்த உத்தரவில், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்பாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கும் தண்டனைக்குரிய சட்டத்தை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், வந்தே மாதரம் பாடலின் கடைசி 4 சரணங்கள் இந்து தெய்வங்கள் மீதான பக்தி உணர்வை வெளிப்படையாக வலியுறுத்துகிறது. அப்பகுதிகளைப் பாடுவதைக் கட்டாயமாக்குவது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மீறுவதாகும்.
தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வந்தே மாதரம் பாடலைக் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்தம் தன்னிச்சையானது. அது தனிநபர் சுதந்திரத்தை மீறுவதோடு பெரும்பான்மை மதக் கருத்தை முன்னிறுத்துகிறது என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இம்மனு இன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, வந்தே மாதரம் தேசியப் பாடல் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அதை பாடாததற்கான தண்டனை விளைவுகள் குறித்த அம்சத்தை, அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளின் கீழ் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் இம்மனு தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் முறைப்படி நோட்டீஸ் அனுப்பவில்லை என்றாலும், 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.