இந்தியா

வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு வழக்கு: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

நீதித்துறையை யாராலும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) பணியில் லட்சக்கணக்கில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் போது லட்சக்கணக்கில் வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேரணியாகச் சென்று புகார் மனுவைத் தாக்கல் செய்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இதர எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து தாக்கல் செய்த இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்ய பாக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையமும் தலைமைத் தேர்தல் ஆணையரும் உரிய பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்குகள் அனைத்தும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள இதே போன்ற பிற எஸ்.ஐ.ஆர். வழக்குகளுடன் இணைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியாக வந்ததைக் குறிப்பிட்டு, நீதிமன்ற வளாகத்திற்குள் அரசியல் பேரணிகளுக்குத் தடை விதிக்கக் கோரியும், தலைமை நீதிபதிக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் அவமதிப்பு நடவடிக்கை கோரியும் நான்கு வழக்கறிஞர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைக் கண்டித்து நீதிபதிகள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி, “நீதித்துறையை யாராலும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. நாங்கள் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கவில்லை; நீதிமன்றத்திற்கு வெளியே என்ன நடக்கிறது, உள்ளே என்ன பேசப்படுகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

உடன் பேசிய நீதிபதி ஜோய்மால்ய பாக்ச்சி, நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இப்போதைக்குச் கடுமையான அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றாலும், தொடர்புடையவர்களின் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT