இந்தியா

மேகதாது அணை வழக்கில் தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

13.11.2025-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த 2025 நவம்பர் மாதம் 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதனையடுத்து, மேகதாது அணை திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கடந்த 2025 டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது இந்த மறுஆய்வு மனு 15.04.2026 அன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், விபுல்.எம். பஞ்சோலி ஆகியோரின் அறையில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது.

ஆனால், மேகாது அணை தொடர்பான சீராய்வு மனுவை நீதிபதியின் சேம்பரில் விசாரிக்காமல், வழக்கமான நடைமுறையில் நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த வேண்டும், ஏனெனில் இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் எடுத்து வைக்க வேண்டியது உள்ளது என தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் கோரிக்கை வைத்திருந்தது. குறிப்பாக, காவிரி வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பிலும் அதனை ஏற்றுக் கொண்டு, சில மாற்றங்களுடன் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018ம் வழங்கிய தீர்ப்பிலும் மேகதாது அணை திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கடந்த 13.11. 2025 அன்று பிறப்பித்த உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது, அது ஏற்கனவே நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானது, எனவே அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தமிழ்நாடு அரசின் மனுவை தங்களது அறையில் பரிசீலித்த பின் தமிழக அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை நீதிமன்ற அறையில் விசாரணைக்கு பட்டியலிடுவதற்கான மனு நிராகரிக்கப்படுகிறது. அதேபோல், 13.11.2025-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.

மறுஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் நாங்கள் கவனமாகப் பரிசீலித்தோம். அப்போது 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.