வழக்கறிஞர் ஸ்ருதி பிஷ்ட் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மதச் சடங்குகள் மற்றும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக விலங்குகளைக் கொல்வதிலிருந்து விலக்கு அளிக்கும் 1960-ஆம் ஆண்டின் விலங்கு வதை தடுப்புச் சட்டம்-ன் பிரிவுகளில் உரிய திருத்தங்களை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
கோயில்களில் பலியிடுவது உள்ளிட்ட மதச் சடங்குகளின் போது விலங்குகளைக் கொல்வது மற்றும் பலியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர்.மகாதேவன் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுதாரரின் வாதங்களைக் கேட்டறிந்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளது.
வழக்கறிஞர் ஸ்ருதி பிஷ்ட் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மதச் சடங்குகள் மற்றும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக விலங்குகளைக் கொல்வதிலிருந்து விலக்கு அளிக்கும் 1960-ஆம் ஆண்டின் விலங்கு வதை தடுப்புச் சட்டம்-ன் பிரிவுகளில் உரிய திருத்தங்களை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதில் வேறு எந்தத் தரப்பினரும் தலையிட அனுமதி மறுத்ததுடன், தேவைப்பட்டால் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தியது.
இதற்கு முன்பு மத்திய விலங்கு பராமரிப்பு அமைச்சகத்திடமிருந்து உச்ச நீதிமன்றம் இது தொடர்பாகப் பதிலை கோரியிருந்தது. மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், விலங்கு பலி கொடுக்கும் வழக்கம் ஆரம்பத்தில் குறைந்திருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அது தொடர்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, இமயமலைப் பிராந்தியம், வடகிழக்கு இந்தியா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இந்த வழக்கம் தொடர்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், மதத்தின் பெயரால் விலங்குகளை கொல்வது அரசியலமைப்பின் 21-வது பிரிவு வழங்கும் வாழ்வுரிமைக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் வாதிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.