இந்தியா

கோடை விடுமுறை: பக்தர்கள் குவிவதால் திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து- 8 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம்

வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் கோடைக் காலத்திலும் வைகுண்ட ஏகாதசி நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானம் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தயாரித்து வருகிறது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் புள்ளி விவரத்தை சேகரித்து உள்ளனர்.

வி.ஐ.பி தரிசனத்திற்கு தினமும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் 3,800 பேர் மட்டுமே தரிசனம் செய்கின்றனர். அந்த 3 மணி நேரத்தை சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கினால் 15 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய முடியும். எனவே வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் இலவச தரிசன நேர ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் கோடைக் காலத்திலும் வைகுண்ட ஏகாதசி நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் தரிசனத்திற்கு வரும் சாதாரண பக்தர்கள் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

திருப்பதியில் நேற்று 72,724 பேர் தரிசனம் செய்தனர். 31,786 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.