இந்தியா

இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!

குலுவிலிருந்து பாங்கிக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ வாகனம், உதய்பூர்-கில்லார் சாலையில் உள்ள கஹு-டு நாலா அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகளுக்கு அடியில் புதைந்தது.

இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில், இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதய்பூர்-கில்லர் வழித்தடத்தில் உள்ள கஹு-து நாலா அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மலையின் ஒரு பகுதி திடீரெனச் சரிந்து, குலுவிலிருந்து பாங்கிக்குச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ வாகனம்மீது ராட்சதப் பாறைகள் விழுந்துள்ளன.

இதில் வாகனம் சம்பவ இடத்திலேயே பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மீட்புக் குழுவினர், காயமடைந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது பெய்து வரும் கனமழையின் போது, ​​நிலச்சரிவு அபாயம் உள்ள சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், மலைப்பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் பார்மோர் சட்டமன்ற உறுப்பினர் ஜனக் ராஜ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.