இந்தியா

ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: 'ஸ்விகி,சொமேட்டோ' மூலம் உணவளித்து ஆதரவு!

மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநில பொதுச்சேவை ஆணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) நடத்திய அரசு வேலைவாய்ப்புப் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாகக் கூறி, ஆயிரக்கணக்கான தேர்வர்களும் மாணவர்களும் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், முன்பின் தெரியாத மனிதர்கள் காட்டும் 'டிஜிட்டல் மனிதநேயம்' புதிய சமூகப் புரட்சியாக மாறியுள்ளது.

'ஸ்விகி, சொமேட்டோ' மூலம் குவியும் உணவுப் பொட்டலங்கள்

டெல்லியில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அதே போன்ற ஒரு நெகிழ்ச்சியான ஆதரவு அலை தற்போது ராஞ்சியிலும் வீசத் தொடங்கியுள்ளது.

அநாமதேயக் கொடையாளர்கள்:

மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர நகரங்களில் வாழும் பொதுமக்கள், ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளான 'Swiggy' மற்றும் 'Zomato' மூலம் உணவுகளை ஆர்டர் செய்து ராஞ்சி போராட்டக் களத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். உணவை ஆர்டர் செய்யும் நபர்கள், "ராஞ்சி மைதானத்தில் பசியுடன் போராடும் மாணவர்களுக்கு இதை வழங்கவும்" எனக் குறிப்பு எழுதி உணவை அனுப்பி வைக்கின்றனர்.

நள்ளிரவிலும் தொடரும் சேவை:

மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?

ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ள மாநில குற்றப்பிரிவு விசாரணையில் திருப்தியில்லை என்றும், CBI மற்றும் அமலாக்கத்துறை மூலம் நடுநிலையான மத்திய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் 14-வது JPSC முதன்மைத் தேர்வு மற்றும் JSSC-CGL தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டி, தேர்வு வாரியங்களின் உயர் அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சட்டமன்ற முற்றுகை எச்சரிக்கை:

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மழை மற்றும் கடுமையான வெப்பத்திற்கு இடையே குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள் போன்றவை போராட்டக் களத்தில் பெரும் சவாலாக உள்ளன. அரசு தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்க்காவிட்டால், மாநிலச் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக 'Gen Z' இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.

பாதுகாப்பு பலப்படுத்துதல்:

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, ராஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ரெயில் நிலையங்கள், முக்கியப் பகுதிகளில் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் நீதிக்கான இப்போராட்டத்தில், உணவோ இருப்பிடமோ தடையாக இருக்கக் கூடாது என்பதில் இணைய வழியில் ஒன்றுபட்ட இந்திய மக்கள் உறுதியாக உள்ளனர். 'ஸ்விகி - சொமேட்டோ' போன்ற வர்த்தக தளங்கள், மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு கரங்கள் நீட்டும் புதிய வடிவிலான டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது சமூக வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.