இந்தியா

டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!

இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் நடைபெற்ற 'சான்சத் சலோ' (பாராளுமன்ற முற்றுகை) பேரணியின் போது, காவல்துறையினரின் நடவடிக்கையில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளம் பெண், தற்போது செயற்கை சுவாசக் கருவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவரைப் பராமரித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற 'ராம் மனோஹர் லோகியா' மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில் உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த சாக்ஷி (21) என்ற அம்மாணவி, தற்போது முழு சுயநினைவுடன் உள்ளார்.

அவர் மருத்துவர்களின் வழிகாட்டுதல்களுக்குச் சரியாகப் பதிலளிப்பதுடன், செயற்கை சுவாசக் கருவியின் உதவியின்றி சுயமாகச் சுவாசித்து வருகிறார். அவரது மூளை மற்றும் தண்டுவடம் சார்ந்த எம்.ஆர்.ஐ பரிசோதனை முடிவுகள் அனைத்தும் இயல்பாகவே வந்துள்ளன.

தொடர் கண்காணிப்பு:

கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நிலையில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அவர் இன்னும் சில நாட்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வாணையச் சீர்திருத்தங்கள் கோரி CJP அமைப்பினர் நடத்திய பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போராட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது அம்மாணவிக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக அவர் RML மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 'ஜே.பி. நட்டா' RML மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையில் இருந்த மாணவியைச் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்திருந்தார். தற்போது மாணவி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பது அவரது குடும்பத்தினருக்கும் சக மாணவர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.