மகாராஷ்டிராவில் அரசு பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த ஒரு மாணவர் ஒருவரிடம் அபராத தொகையாக, புனே மாநகர் பரிவஹன் மகா மண்டல் லிமிடெட் பயணச்சீட்டு சோதனை அதிகாரி ரூ.7,000 வசூலித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் நபர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.500-ஆக இருக்கும்போது தன்னிடம் இருந்து பணத்தை பறித்துவிட்டதாக மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.
புனேவில் கடந்த செவ்வாய்க்கிழமை வகாடி பேருந்து நிலையத்தில் இருந்து கத்ராஜூக் பகுதிக்கு அரசுப் பேருந்தில் மாணவர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தை சோதனை செய்த பயணச்சீட்டு அதிகாரி, மாணவரிடம் பயணச்சீட்டு கேட்டுள்ளார்.
பின்னர் மாணவர் தனது செல்போனில் காலை 9:15 மணி முதல் 10:30 மணி வரை இணையவழியில் தோல்வியடைந்த பயணச்சீட்டு பணப்பரிவர்த்தனைகளை காண்பித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவர் கூறுகையில், தோல்வியடைந்த பரிவர்த்தனைகள் பயணச்சீட்டு இல்லாத பயணமாக கருதப்பட்டதாகவும், அதன் காரணமாக ஆரம்பத்தில் தன்னிடம் 13,000 செலுத்தும்படி டிக்கெட் பரிசோதனை அதிகாரி கேட்டதாகவும் மாணவர் குற்றம் சாட்டினார்.
பின்னர் அந்தத் தொகை ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டு, இறுதியாக ரூ.7,000 வசூலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அபராதத் தொகையை எவ்வாறு பேரம் பேச முடியும் என்றும், அவ்வாறு செய்வதற்கு பயணச்சீட்டு சோதனை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளதா என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசு பேருந்தின் (PMPML) கணக்கிற்கு பதிலாக, டிக்கெட் பரிசோதகரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.7,000 மாற்றப்பட்டதாக மாணவர் கூறினார்.
மேலும் அதற்கான ரசீது வழங்கும்போது, ரூ.7,000 அபராத தொகையை தானாக முன்வந்து செலுத்துவதாக தன்னை எழுத வைத்ததாகவும் அந்த மாணவர் கூறினார்.
இந்த நிலையில் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், டிக்கெட் இல்லாத பயணம் அனுமதிக்கப்படாது; அதே சமயம், அபராதம் வசூலிக்கும்போது எங்கள் ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஒரு பயணி ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டாலோ அல்லது தவறான தொகை வசூலிக்கப்பட்டதாக நம்பினாலோ, நாங்கள் டிக்கெட் மற்றும் கட்டணப் பதிவுகளை சரிபார்ப்போம் என்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையை மீறும் எந்தவொரு ஊழியர் மீதம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புனே போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.