திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்ததற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் முக்கிய காரணம் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி பேசினார். அப்போது மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனான சந்திப்பு குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பிரணாப் முகர்ஜி உடனான சந்திப்பு குறித்து சுவேந்து அதிகாரி தெரிவித்ததாவது:-
பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக இருந்தபோது, அவரை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தேன். அப்போது, அரசியலில் தனக்கென ஒரு பாதையை உருவாக்க விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இயங்கும் தனியார் நிறுவனம் போன்றது.
என்னுடைய உண்மையான ஆலோசகர் பிரணாப் முகர்ஜி. பிரணாப் முகர்ஜி என்னிடம், நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்று யோசித்துப் பார். நீ ஒரு பணியாளராகவே நீடிக்க விரும்பினால், இங்கேயே இரு. ஒருவேளை நீ சொந்தமாக முன்னேற விரும்பினால், மோடிஜியுடன் இணைந்து செயல்படு என்றார்.
நானும் அங்கேதான் (திரிணாமுல் காங்கிரஸ்) இருந்தேன். இருப்பினும், பணியாளராக இருக்க விரும்பவில்லை. ஆகவே, அங்கிருந்து விலகி பாஜக-வில் இணைந்தேன்.
அவர் என்னுடைய பாதுகாவலர். என்னுடைய ஆலோசகர். அரசியலை தாண்டி, ஒவ்வொரு இந்தியரும் பிரணாப் முகர்ஜியை மதிக்கிறார்கள்.
சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜிக்கு வலதுகரமாக திகழ்ந்து வந்தார். 2020-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார். 2021 தேர்தலில் எதிர்க்கட்சி தலைவரானார். 2026-ல் பாஜக அமோக வெற்றி பெற்றது. முதல்வராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.