இந்தியா

Starlink-கை முடக்கும் இந்திய தொழிலதிபர்கள்? எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை மறுத்தது இந்திய அரசு!

GMPCS உரிமம் பெற்று ஓராண்டாகியும் இறுதி அனுமதி இல்லை - 20 கேட்வே தளங்களுடன் ரெடியாக இருப்பதாக ஸ்டார்லிங்க் துணைத் தலைவர் தகவல்

இந்திய மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதில் சில தொழிலதிபர்கள் தங்களது ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஸ்டார்லிங்க் சேவையை முடக்குவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டை இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது.

இந்தியா அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் "நியாயமான மற்றும் பாரபட்சமற்ற உரிமக் கட்டமைப்பை" கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தற்போதைய நிலை என்ன?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதற்கான தேவையான ஆரம்பகட்ட உரிமங்களைப் பெற்று ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஆனால், சேவையைத் தொடங்க தேவையான இறுதி அனுமதிகள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்தியாவில் செயற்கைக்கோள் வழி தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான GMPCS உரிமத்தை ஸ்டார்லிங்க் உட்பட மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளன. மற்ற இரண்டு நிறுவனங்கள்:

  • பார்தி (Airtel) ஆதரவு பெற்ற Eutelsat OneWeb

  • ரிலையன்ஸ் ஜியோவின் Jio Satellite Communications Ltd
    (ஜெஃப் பெசோஸின் அமேசான் லியோ (Amazon Leo) நிறுவனமும் இந்த உரிமத்தைப் பெற தீவிரமாக முயன்று வருகிறது).

தாமதத்திற்கான காரணம் என்ன?

இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,

இந்தியாவில் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் நாட்டின் பாதுகாப்பு விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பயனர் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது இந்த மூன்று நிறுவனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின்னரே, அடுத்த கட்டமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கும்.

தற்போதைய நிலவரப்படி, உரிமம் பெற்ற மூன்று நிறுவனங்களுமே ஒரே ஒழுங்குமுறை கட்டத்தில்தான் உள்ளன. எனவே, ஸ்டார்லிங்க் நிறுவனம் மட்டும் தனியாகப் புறக்கணிக்கப்படவில்லை.

எலான் மஸ்க் மற்றும் ஸ்டார்லிங்க் தரப்பு கூறுவது என்ன?

மஸ்க்கின் குற்றச்சாட்டு

எலான் மஸ்க் தனது 'X' பக்கத்தில், "துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக பிடியை தக்கவைத்துக் கொள்வதற்காக சில தொழிலதிபர்களால் நாங்கள் தடுக்கப்படுகிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்திய அரசு

மஸ்க்கின் இந்த பதிவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026' நிகழ்வில் பேசிய Space X நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் வணிக செயல்பாட்டுத் துணைத் தலைவர் லாரன் டிரேயர், இந்தியப் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உள்கட்டமைப்புகளையும் அமைத்துவிட்டதாகக் கூறினார்.

இந்தியாவில் 20 கேட்வே தளங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டெனாக்களை அமைத்து, இந்தியப் பயனர்களின் தரவுகள் இந்தியாவிற்குள்ளேயே இருக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு பாரபட்சமாக இருப்பதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என்று இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT