இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்கி, சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஞானேஷ்குமார் தலைமையில் எடுக்கப்பட்ட அனைத்து தவறான முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைய சர்ச்சையை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது;
“கடந்த சில நாட்களாக, தேர்தல் ஆணையத்தின் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஞானேஷ் குமாரின் உண்மையான முகம் இப்போது நாட்டிற்கு தெரியவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் சிவசேனாவின் சின்னத்தையும் பெயரையும் துரோகிகளிடம் ஒப்படைத்தது. தேர்தலுக்கு முன்னதாக சுமார் 40 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தேர்தலுக்குப் பிறகு அவை நீக்கப்பட்டன.
குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாரத்தின் மீதான பேராசையால்தான் இவையெல்லாம் நடக்கின்றன. வாக்குச்சீட்டு முறையிலேயே மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
வாக்குச்சீட்டு முறை தேர்தல் நடைபெற வேண்டும்; ஜனநாயகத்தைக் காக்க மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காக்க நாம் அனைவரும் இன்று ஓரிடத்தில் ஒன்றிணைய வேண்டும்.
நாங்கள் மக்களின் பிரதிநிதிகள்; எனவே, அவர்கள் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கத்தான் வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.