இந்தியா

உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: 5 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான ஐந்து வேட்பாளர்களை கொண்ட பட்டியலை, காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது.

இந்த பட்டியலை வெளியிடுவதற்கு சற்று முன்பு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், எக்ஸ் தள பதிவில், பா.ஜ.க.வை தோற்கடிக்கவும், நாட்டை "தவறான கைகளில்" சிக்காமல் "காப்பாற்றவும்" மதச்சார்பற்ற இரு கட்சிகளுக்கும் ஒரு "வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு" காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

அதே பதிவில், சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முன்வந்துள்ள 26 தொகுதிகள் தவிர, இன்னும் கூடுதல் தொகுதிகளை அடையாளம் கண்டு, அது குறித்து தங்களுக்கு தெரிவிக்குமாறு காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொண்டார்.

வேட்பாளர் பட்டியல்:

கட்சி வெளியிட்ட பட்டியலின்படி, சஹாரன்பூர் மாவட்டத்தின் பெஹத் சட்டப்பேரவை தொகுதிக்கு உமர் அலி கானும், சஹாரன்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு அஷு மாலிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஷாம்லி மாவட்டத்தின் கைரானா சட்டப்பேரவை தொகுதிக்கு நஹித் ஹசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்ரோஹா சட்டப்பேரவை தொகுதிக்கு மஹபூப் அலியும், லலித்பூர் மாவட்டத்தின் லலித்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜோதி லோதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி தொகுதிக்கான வேட்பாளராக தேஜ் நரேன் பாண்டே (எ) பவன் பாண்டே ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டிருந்தார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளன.

2 சுற்று பேச்சுவார்த்தை:

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் நேற்று (செவ்வாய் கிழமை), ஒவ்வொரு தொகுதியாக விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை, இன்னும் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குள் இறுதி செய்துவிடலாம் என்று இரு தரப்பு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சி 26 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சுமார் 130 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளது. டெல்லியில் நேற்று (செவ்வாய் கிழமை) நடைபெற்ற கூட்டத்தில், இரு கட்சி தலைவர்களும் ஒவ்வொரு தொகுதியாக விவாதித்தனர். இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், விரைவில் மேலும் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT