கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 4-ந் தேதி தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக காசர்சோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள கல்வி மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
நாளை (7-ந்தேதி) வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், காசர்கோடு, கண்ணூர், பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (8-ந் தேதி) பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கேரள கடற்கரை மற்றும் கடற்பரப்பில் 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், சில நேரங்களில் 60 கி.மீட்டர் வேகத்திலும் காற்றின் வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வாகன விபத்துக்கள், மரம் சாய்ந்த விபத்து, மின் விபத்து போன்றவற்றில் மாநிலம் முழுவதும் 7 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.