கேரளம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கேரளத்துக்கு அதிகளவு மழை தரும் என்பதால் தென்மேற்கு பருவமழை பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும். மேலும் இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். சீசன் காலம் முழுவதும் அங்கு சாரல் மழையுடன் குளிர்ச்சியான இதமான தட்டவெப்ப நிலை நிலவும். மேலும் அருவிகளில் தண்ணீர் கொட்டும்.
இதனால் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் எப்போது தொடங்கும் என்று கேரளம் மாநிலத்தில் மட்டுமுன்றி தமிழகத்திலும் பெரிதளவில் எதிர்பார்க்கப்படும். இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் பருவமழை தொடங்கியதில் இருந்தே கேரளம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
காற்றின் வேகமும் இயல்பை விட அதிகமாக இருப்பதால் ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல இடங்களில் வீடுகள் மற்றும் பள்ளிகளின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அந்த பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்தநிலையில் கேரளம் மாநிலத்தில் வருகிற 12-ந்தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கோழிக்கோடு, காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலார்ட்” விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
அது மட்டுமின்றி இன்று மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
கனமழை கொட்டியபடி இருப்பதால் கேரள கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவே இருக்கின்றன. மேலும் காற்றும் அதி வேகமாக அடித்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.