மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஜூன் 28 அன்று தொடங்கி 17-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் நாட்டின் பல முன்னணி ஆளுமைகள் அவருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சோனம் வாங்சுக்கிற்கு விடுத்துள்ள செய்தியில், "சோனம் சார், உங்களுடைய இந்த உண்ணாவிரதப் போராட்டம் நீதிக்காகப் போராடும் நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைத்துள்ளது. உங்கள் இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
இந்த அரசுக்கு உங்கள் உயிரைப் பற்றியோ, அல்லது கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை. ஆனால், உங்கள் உயிர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவுசெய்து உங்களது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, தொடர்ந்து உங்களது போராட்டத்தை வேறு வழிகளில் முன்னெடுங்கள்.
முன்னதாக, புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா மற்றும் பொருளாதார அறிஞர் ஜெயதி கோஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இணைந்து, மாணவர்களின் எதிர்காலத்திற்காகப் போராடும் இப்போராட்டத்திற்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துகூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். "இந்தப் போராட்டம் என்பது ஒரு குறுகிய ஓட்டப்பந்தயம் அல்ல, அது ஒரு மாரத்தான் பயணம். எதிர்காலப் போராட்டங்களை வழிநடத்த உங்கள் உடல்நலமும், வலிமையும் எங்களுக்குத் தேவை" எனக் கூறி உண்ணாவிரதத்தை முடிக்குமாறு வாங்சுக்கை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டம் தொடங்கி 17 நாட்கள் கடந்துள்ள நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல் எடை சுமார் 8.2 கிலோகிராம் குறைந்துள்ளது.
ரத்த அழுத்தம் 107/70 mmHg தொட்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவு 67 mg/dL ஆக உள்ளது. இது தொட்ர்ந்தால் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதே வேளையில், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற 'ஐசா' மாணவர் அமைப்பைச் சேர்ந்த தீபக் என்ற மாணவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய போராட்ட நிலவரங்களை ஒப்பிட்டுப் பேசிய சி.ஜே.பி அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே, "2011-ல் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது, 12 நாட்களுக்குள் அன்றைய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைத்தது. ஆனால் இன்றைய இந்தியாவில், மனித உயிர்களுக்கு அரசு மதிப்பளிப்பதில்லை."
மகசேசே விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற கல்வியாளரும், கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை இவ்வளவு மோசமடைந்தும், மத்திய அரசு இதுவரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.