டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் காவல்துறையினருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக் நீல நிற சட்டையுடன் தனது மனைவியுடன் மருத்துவமனை நடைபாதையில் நடந்து வரும்போது, அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.
காவல்துறையினர் அவரை வெளியேற அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த சோனம் வாங்சுக் மருத்துவமனை தரையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தான் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பேசிய வாங்சுக், "சப்தர்ஜங் மருத்துவமனையில் என்னை ஒரு கைதியைப் போல நடத்தினார்கள். வடகொரியாவில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதில்,
சோனம் வாங்சுக்கை அவர் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. அதன் அடிப்படையில் அவர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற முயன்றார்.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ உத்தரவு நகல் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வந்து சேரும் வரை அவரை சட்டப்பூர்வமாக வெளியே அனுப்ப முடியாது என்பதால், காவல்துறை அவரைத் தடுத்து நிறுத்தியதாக மருத்துவமனை தெளிவுபடுத்தியுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த பிறகே அவர் விடுவிக்கப்பட்டார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 26 நாட்களாகப் போராடி வந்த சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை மற்றும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதியைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் நகல் கைக்குக் கிடைக்காததால் ஏற்பட்ட தாமதமே இந்த வாக்குவாதத்திற்குக் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ள நிலையில், இந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.