உத்தரப் பிரதேசத்தில் தனது தந்தைய கொலை செய்வதற்காக வீட்டு வேலைக்காரரிடம் 6 லட்சம் ரூபாய் கொடுத்த வழக்கில், போதை பொருள் வியாபாரியின் மகனை போலீசார் கைது செய்தனர்.
கான்பூர் அடுத்த கல்யான்பூரில் உள்ள ரத்தன் ஆர்ப்ட் அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் வியாபாரியான 60 வயது வினீத் மினோச்சா என்பவர் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ஷாலு மற்றும் கூலிப்படையை சேர்ந்த விஷால், ராஜ்கிஷோர் ஆகியோர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு விஷால் ஒரு புதிய சிம் கார்டை வாங்கி, அதிலிருந்து கொலை செய்யப்பட்டவரின் மகனான சுப்ரத் என்பவரிடம் பேசியுள்ளதாக புலனாய்வளர்கள் தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கில் சுப்ரத் தன்னிடம் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, தந்தையை கொலை செய்ய சொன்னதாகவும், ஒருவேளை போலீசாரிடம் மாட்டிக்கொண்டால் சுப்ரத்தின் மனைவியான ஷாலு என்பவரின் பெயரை கூறுமாறு சொன்னதாகவும், கைது செய்யப்பட்ட விஷால் வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்து வீட்டு வேலைக்காரரான விஷால் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “முன்னதாக, சுப்ரத் என் மூலமாக அவரது சொந்த கடையில் ஒரு திருட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சுப்ரத் என்னிடம் அவருக்கு 15 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறினார்” என்று வாக்குமூலம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஷாலு என்பவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், ரத்தன் ஆர்பிட்டில் உள்ள ஒரு காலி மனையிலிருந்து இரத்தக்கறை படிந்த துணி மற்றும் வீட்டின் சாவி ஆகியவற்றை போலீசார் மீட்டெடுத்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியின் மகனான சுப்ரத்தையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.