விசாரணையில், கூரியர் சேவைகள் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
கேரளம் மாநிலத்தில் ேபாதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சம்பவத்தன்று காசர் கோடு கும்பளா போலீசார் நடத்திய வேட்டையில், ஷிரியாவைச் சேர்ந்த முகமது அன்சாத் (வயது 26) என்பவர் கைது செய்யப்ட்டார். அவரிடம் இருந்து 1.8 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் மற்றும் ரூ.2.97 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கூரியர் சேவைகள் மூலம் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து மங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் 3 செல்போன்கள், ஒரு கார், ஒரு ஆட்டோ மற்றும் வாட்டர் பியூரிபையர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இருந்து போதைப்பொருளை பெற்று, அதை வாட்டர் பியூரிபையரின் தண்ணீர் சேமிக்கும் அறைக்குள் மறைத்து வைத்து, மங்களூருக்கு கூரியர் மூலம் கொண்டு வந்துள்ளனர். அவற்றை மங்களூர் மற்றும் கேரளாவில் விற்க திட்டமிட்டிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைதானவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மங்கல்பாடி பஞ்சாயத்தை சேர்ந்த அப்துல் ஹபீல் (25), மங்களூருவை சேர்ந்த ஜியா உல் ஹக் (30), அல்தாப் (28) என தெரிய வந்தது. இந்த நிலையில் கேரளம் மாநிலத்திற்கு ரெயிலில் வந்த 2 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். மங்கல்படி பஞ்சாயத்தில் உள்ள சோன்கல், பிரதாப் நகரைச் சேர்ந்த அகமது ருக்ஷாத் (33) மற்றும் அப்துல் ஹமீத் (30) என அடையாளம் காணப்பட்டனர்.
டெல்லியில் இருந்து வந்த மங்களா எக்ஸ்பிரசில் காசர்கோடு நிலேஷ்வர் ரெயில் நிலையம் வந்து இறங்கிய அவர்களிடம் இருந்து 665.67 கிராம் எம்.டி.எம்.ஏ-வை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.58 லட்சம் என கூறப்படுகிறது. விசாரணையில், அவர்கள் இருவரும் பஞ்சாப்பில் போதைப் பொருளை வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கிடையில் நேற்று சோன்கலில் உள்ள பிரதாப் நகரைச் சேர்ந்த நவுஷாத் அலி (40) மற்றும் யூசுப் அப்சல் (35) ஆகிய இருவரை நிலேஷ்வர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிலேஷ்வர் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ருக்ஷாத் மற்றும் ஹமீத்தை அழைத்து செல்வதற்காக வந்தவர்கள் என தெரிகிறது. நிலேஷ்வர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் ஹோஸ்துர்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் மீது, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் 22 (c), 29 மற்றும் 8 (c) பிரிவுகளின் கீழ், வணிக அளவிலான MDMA வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.