பாஜக கட்சியை சேர்ந்த ஸ்மிரிதி இரானி இரண்டு முறை (2014 மற்றும் 2019) உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார்.
இவர் 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கவுரிகஞ்ச் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேதான் மவாய் கிராமத்தில் வீடு ஒன்றை கட்டினார். இந்த கிராமத்தில் உள்ள வீட்டின் முகவரில் வாக்காளர் அட்டை பெற்றிருந்தார். அதன் அடிப்படையில்தான் 2024 மக்களவை தேர்தலில் வாக்களித்தார்.
இந்த நிலையில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஜூன் 10-ந்தேதி (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டது. இதில் ஸ்மிரிதி இரானி பெயர் இடம் பெறவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்குப் பின் சரியான தகவல் தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அமேதி மாவட்ட பாஜக தலைவர் சுதான்ஷு சுக்லா கூறுகையில் ‘‘ஸ்மிரிதி இரானி பெயரை சேர்ப்பதற்காக அப்ளிகேசன் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தை சீனியர் அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளோம். முறையான சரிபார்ப்புக்குப் பிறகு அவரது பெயர் கண்டிப்பாக சேர்க்கப்படும்" என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பெயரே நீக்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.