இந்தியா

நிச்சயதார்த்தத்திற்கு முன்பே ரகசிய திருமணம்-புனே தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!

தங்களின் ரகசிய திருமணம் அம்பலமாகிவிடும் என்று பயந்த சியாவும் சேத்தனும், கேதனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

பூனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வாலுக்கும் (25), சியாவிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வரும் நவம்பர் மாதம் உதய்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால், சியா தனது கல்லூரி காதலனான சேத்தன் சவுத்ரியை 4 மாதங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் திருமணத்தில் சாட்சிகளாக கையெழுத்திட்ட சியாவின் இரண்டு கல்லூரி தோழிகளிடமும் தற்போது புனே ஊரகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைத் திட்டம் அவசர அவசரமாக அரங்கேறியது ஏன்?

திருமண ஏற்பாடுகளுக்காக கேதனின் குடும்பத்தினர், சியாவின் ஆதார் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்களைக் கேட்டுள்ளனர். இதனால் தங்களின் ரகசிய திருமணம் அம்பலமாகிவிடும் என்று பயந்த சியாவும் சேத்தனும், கேதனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

கடந்த மே மாதமே சியா தனது தோழி ஒருவருக்கு அனுப்பிய ஸ்னாப்சாட் செய்தியில், "உதய்பூர் திருமண டிக்கெட்டுகளுக்காக ஆதார் கார்டை அனுப்பு, எப்படி இருந்தாலும் இந்தத் திருமணம் நடக்கப் போவதில்லை" என்று முன்கூட்டியே மெசேஜ் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று நடந்தது என்ன?

ஜூன் 18, 2026 அன்று சியா திட்டமிட்டபடி கேதனை புனேயில் உள்ள லோஹாகர் கோட்டைக்கு ட்ரெக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். காதலன் சேத்தன் சவுத்ரி அவர்களைத் ரகசியமாகப் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

கோட்டையின் உச்சிக்குச் சென்றதும், சியா கீழே உட்கார்ந்து சேத்தனுக்கு செய்கை காட்டியுள்ளார். உடனே சேத்தன், கேதனை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுள்ளார். முதலில் இது விபத்து என்று கூறப்பட்ட நிலையில், போலீசாரின் அதிரடி விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்று உறுதியானது.

கொலைக்கான ஒத்திகை:

போலீசார் நடத்திய விசாரணையில், சியாவும் சேத்தனும் இந்தக் கொலையைச் செய்வதற்கு முன்பாக, புனேயின் லுல்லாநகர் பகுதியில் உள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத குன்றில் '3 முறை ஒத்திகை' பார்த்துள்ளனர். எப்படித் தள்ள வேண்டும், எப்படி சிக்னல் கொடுக்க வேண்டும் என்று சேத்தன் சியாவை வைத்து ஒத்திகை பார்த்த அதிர்ச்சித் தகவலை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் அதிர்ச்சியால், உயிரிழந்த கேதனின் தாத்தாவும் மாரடைப்பால் மரணமடைந்தது அந்த குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசு இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட்டுள்ளது.