இந்தியா

ஐதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட அக்கா, தங்கை பலி

மாம்பழங்களைச் சாப்பிட்ட பிறகு சகோதரிகள் உடல்நலம் குன்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜி.எச்.எம்.சி. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் இல்லத்திற்குச் சென்றனர்.

கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் வைஜிநாத், இவரது மனைவி இந்துமதி. தம்பதியினர், பிழைப்புக்காக ஐதராபாத் வந்தனர். அவர்கள் வித்தல்வாடியில் வசித்து வந்தனர்.

வைஜிநாத்துக்கு 4 மகள்கள். இவர்களது உறவினர் ரேணுகா என்பவர் சமீபத்தில் நாராயணகுடாவில் உள்ள ஜல்மண்டலி அலுவலகம் அருகே மாம்பழங்களை வாங்கி வந்துள்ளார்.

இந்துமதியும் அவரது 4 மகள்களும் அந்த மாம்பழங்களைச் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜிநாத்தின் 3-வது மகள் புவனேஸ்வரி (வயது 17) உயிரிழந்தார். மறுநாள் இளைய மகள் சந்தியா இறந்தார்.

இந்துமதி மற்றும் மற்ற 2 மகள்களின் உடல்நிலை சீராக உள்ளது. சகோதரிகளின் மரணம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாம்பழங்களைச் சாப்பிட்ட பிறகு சகோதரிகள் உடல்நலம் குன்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜி.எச்.எம்.சி. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் இல்லத்திற்குச் சென்றனர்.

அவர்கள் வீட்டிலிருந்து உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற அறிக்கைகள் கிடைத்த பின்னரே சகோதரிகளின் மரணம் குறித்த தெளிவு கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.