இந்தியா

SIR: மேற்கு வங்கத்தில் 65 வாக்குச்சாவடி அதிகாரிகளே வாக்களிக்க முடியாத வினோதம் - தலையிட மறுத்த உச்சநீதிமன்றம்

தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

மேற்கு வங்கத் தேர்தலில் வாக்குச்சாவடி அதிகாரிகளாகப் பணியாற்றும் 65 பேருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 65 அதிகாரிகள், அண்மையில் நடந்து முடிந்த எஸ்ஐஆர் செயல்பாட்டில் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தப் புகார்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள தேர்தல் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களிடம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியது.

மேலும் இந்தத் தேர்தலில் ஒருவேளை அவர்களால் வாக்களிக்க முடியாமல் போகலாம், ஆனால் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து நீடிப்பதற்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி வெற்றி பெற்றால், அவர்களுக்காக ஒரு துணை வாக்காளர் பட்டியலை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த அதிகாரிகள் தற்போதைய கட்டத் தேர்தல்களில் வாக்களிப்பது கடினம் என்றே தெரிகிறது

மேற்கு வங்கத்தில் முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23-ல் நடந்தது. இறுதி கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 அன்றும் நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து, குறிப்பாகப் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஒருதலைபட்சமாக செயல்படும் தலமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டிஸ் அளித்துள்ளன.