இந்தியா

Breakfast 2.0: டி.கே. சிவக்குமார் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட சித்தராமையா - முடிவுக்கு வந்த மோதல்

முதலமைச்சர் பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்தார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார்

மாலை மலர்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் செயல்பட்டு வருகிறார்கள்.

2½ ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் ஒப்பந்தப்படி முதலமைச்சர் பதவியில் இருந்து விலக சித்தராமையா மறுத்துள்ளார். இதனால் சிவக்குமார் அதிருப்தி அடைந்தார். அவரது ஆதரவாளர்கள் டெல்லியை முற்றுகையிட்டு சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த அதிகார மோதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் வருகிற 1-ந்தேதிக்கு முன்பு முடிவு செய்யும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக டி.கே. சிவக்குமார் முதலமைச்சர் சித்தராமையா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது சித்தராமையாவும், சிவக்குமாரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் உப்புமா ஆகியவை காலை உணவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று டி.கே. சிவக்குமார் வீட்டிற்கு முதலமைச்சர் சித்தராமையா சென்றுள்ளார். அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.

இது தொடர்பான படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள டி.கே. சிவக்குமார், "காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நல்லாட்சி மற்றும் நமது மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான எங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, இன்று எனது இல்லத்தில் முதலமைச்சருக்கு காலை உணவை அளித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக முதல்-மந்திரி விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா விலகி சிவக்குமார் முதல்-மந்திரி ஆவாரா? அல்லது முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா நீடிப்பாரா? என்பது விரைவில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Hosted the Hon'ble CM for breakfast at my residence today as we reaffirm our commitment to good governance and the continued development of our state under the Congress vision. pic.twitter.com/qmBxr50S64