பெங்களூரு :
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உக்ரைனில் இந்திய மாணவர்கள் உயிருக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே காரணம். ரஷியா-உக்ரைன் இடையே போர் மூளும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எந்த நேரத்திலும் போர் தொடங்கும் நிலை காணப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் குடிமக்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பணிகளை முன்கூட்டியே தொடங்கின.
ஆனால் இந்தியா மட்டும் போர் தொடங்கப்படும் வரை இந்தியர்களை மீட்கும் பணிகளை தொடங்கவில்லை. மோடி உலகின் குரு என்று கூறிக்கொள்ளும் பா.ஜனதாவினர், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை. உக்ரைனில் மாணவர் நவீன் சாவுக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம். அந்த மாணவரின் தந்தை மற்றும் அங்கு சிக்கியுள்ள மாணவர்களின் பெற்றோரின் கருத்துகள், மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டதற்கு சாட்சியாக உள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், இங்கு நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது இல்லை என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார். இது அவரது பொறுப்பற்ற கருத்தை கூறுகிறது. இத்தகைய கருத்துகளை கூறி காலவிரயம் செய்வதற்கு பதிலாக உக்ரைனில் நெருக்கடியில் சிக்கி இருக்கும் மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.