இந்தியா

புத்தகங்கங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள்.. மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

உங்களுக்குத் தேவையில்லை என்றால், அவற்றைப் பாதுகாத்து மதிக்கக்கூடிய வேறு ஏதேனும் நாட்டிற்குக் கொடுங்கள்

டெல்லியில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான மத்திய செயலக நூலகத்திலிருந்து சுமார் 8.5 லட்சம் புத்தகங்களை இடமாற்றம் செய்த மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

டெல்லியில் சாஸ்திரி பவனில் 135 ஆண்டுகள் பழமையான மத்திய செயலக நூலகம் இயங்கி வருகிறது.

மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் சாஸ்திரி பவன் இடிக்கப்படவுள்ளது.

எனவே அங்குள்ள 8.5 லட்சம் புத்தகங்களை இடமாற்றம் செய்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் அவை எங்கு இடமாற்றம் செய்கின்றன, எவ்வாறு செய்யப்படுகின்றன எண்பதுபோன்றவற்றில் தெளிவின்மை நீடிக்கிறது.

இந்த சூழலில் அப்புத்தகங்களை பாதுக்காக்கும் பொருட்டு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.

நேற்று நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது.

வாதம்

நவம்பர் மாதத்திற்குள் புத்தகங்களை இடமாற்றம் செய்ய அரசு மிகுந்த அவசரத்தில் இருப்பதாகத் தெரிகிறது என்றும், இந்த செயல்முறைக்குத் தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் ஹரிப்ரியா பத்மநாபன் வாதிட்டார்.

புதிய இடத்தில் நூலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தற்போது புத்தக அலமாரிகள் உள்ள இடத்திற்கும் புதிய கட்டிடத்தில் உள்ள இடத்திற்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வை மையம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஆர்.கே.புரத்தில் உள்ள நூலகத்தில் சுமார் இரண்டு லட்சம் புத்தகங்கள் கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகள் சாடல்

விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், புத்தகங்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் தெளிவின்மை காட்டிய மத்திய அரசை சாடினர்.

இந்த புத்தகங்களுக்கு என்ன செய்யப்படுகிறது என்றும், இது தொடர்பாக முறையான திட்டமிடல் எதுவும் இல்லை என்றும் நீதிபதி சஞ்சய் குமார் குறிப்பிட்டார்.

இந்த நூலகத்தில் 1702ஆம் ஆண்டு வரையிலான அரிய சேகரிப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி சஞ்சய் குமார், அவற்றின் வரலாற்று மதிப்பை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

எட்டரை லட்சம் புத்தகங்கள் வீணாக வீசப்படுகின்றன. அவை உங்களுக்குத் தேவையில்லை என்றால், அவற்றைப் பாதுகாத்து மதிக்கக்கூடிய வேறு ஏதேனும் நாட்டிற்குக் கொடுங்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இது ஒரு மாபெரும் பாரம்பரியச் சின்னம் என்றும், இந்தப் புத்தகங்கள் குறித்து அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும், இந்தப் புத்தகங்களுக்கு சிறிதளவாவது மரியாதை காட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணை வரை புத்தகங்கள் இடமாற்றத்தை நிறுத்தி, தற்போதைய நிலையையே தொடருமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT