கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தனது பதவியை கடந்த 28-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது ராஜினாமாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக் கொண்டார். புதிய முதல்வர் முறைப்படி பதவியேற்கும் வரை அவரை தற்காலிக முதல் மந்திரியாக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூரில் உள்ள விதான் சவுதா அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடகாவின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற தலைவராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்பின், சிவக்குமார் ஆளுநரை நேரில் சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோர உள்ளார்.
இந்நிலையில், கர்நாடகா முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ம் தேதி பதவியேற்பார் என அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜி.சி.சந்திரசேகர் தெரிவித்தார்.