இந்தியா

சிறார் பாதுகாப்புக்காக 'ஷீல்டு' மசோதா: மீறினால் ரூ.10 கோடி அபராதம் விதிக்க முன்மொழிவு!

சிறார் பாதுகாப்புக்காக பாஜக எம்.பி. பைஜெயந்த் பாண்டா, ஒரு தனிநபர் மசோதாவை தயார் செய்துள்ளார்.

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகளைத் தொடங்க தடை விதிக்க வகை செய்யும் தனிநபர் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆவதற்கு தயார் செய்யப்பட்டு உள்ளது.

'ஷீல்டு' மசோதா

சமூக ஊடகங்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கட்டிப்போடுகின்றன. இதில் சிறுவர்-சிறுமிகள் பலர் அடிமைகளாக உள்ளனர். இதனால் அவர்கள் சில நேரங்களில் ஆபாச படங்களைப் பார்க்க நேரிடுகிறது. அதுபோல ஆன்லைன் கேமிங்கில் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். இது சமூகத்துக்கு கேடு தரும் செயலாக பார்க்கப்படுகிறது.

எனவே இதனை தடுப்பதற்காகவும், சிறார் பாதுகாப்புக்காகவும் பா.ஜ.க எம்.பி. பைஜெயந்த் பாண்டா, ஒரு தனிநபர் மசோதாவை தயார் செய்துள்ளார். இளம் டிஜிட்டல் தலைமுறையினருக்கான ஆரோக்கியமான இணையச் சூழல்களைப் பாதுகாத்தல் (ஷீல்டு) மசோதா-2025' என அந்த மசோதாவுக்கு பெயரிடப்பட்டு உள்ளது.

கட்டுப்பாடுகள்

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஆன்லைன் கேமிங் கணக்குகள் தொடங்குவதற்கு இந்த மசோதா கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட தளங்கள் வயது சரிபார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதிக்க வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.

சிறுவர்கள் ஆபாசப் படங்கள், சூதாட்டம், பந்தயம், வன்முறை அல்லது பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க இந்தத் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

இதில் செய்யப்படும் மீறல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும் முன்மொழியப்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ-ன் கீழ் அந்த தளங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என்பதையும் மசோதா முன்மொழிகிறது.

அரிது

இந்த மசோதாவை நேற்று முன்தினம் தாக்கல் செய்யலாம் என பைஜெயந்த் பாண்டா நினைத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் அது ஈடேறவில்லை. இதுபோல ஏற்கனவே 2 முறை அவர் முயற்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனிநபர்களின் தத்ரூபமான சாயல்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன் படுத்துவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயார் செய்யப்பட்ட ஒரு தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்ய முடியவில்லை. பொதுவாக தனிநபர் மசோதாக்கள் சட்டமாக இயற்றப்படுவது அரிது.

சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் 12 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.