இந்தியா

லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!

அரை மணி நேரம் லிஃப்டிற்குள் இருந்தது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் லிஃப்டில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் அவருடன் சென்றவர்கள் திடீரென சிக்கிக்கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான சுழலுக்குப் பிறகு, விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

நிகழ்ந்தது என்ன?

திருவனந்தபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் அமைப்பின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சசி தரூர் எம்பி அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை தந்தார்.

அவர் அங்கிருந்த மின்தூக்கியில் பயணித்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டது. ஹோட்டல் ஊழியர்கள் கதவை திறக்க முயன்றும் முடியாததால், தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதிநவீன கருவி மூலம் மீட்பு..

தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லிஃப்ட் கதவுகள் பலமாகப் பூட்டியிருந்ததால், அவர்கள் 'ஹைட்ராலிக் ஸ்பெரெட்டர்' எனப்படும் அதிநவீன கதவு விரிக்கும் கருவியைப் பயன்படுத்தினர்.

இதன் மூலம் லிஃப்ட் கதவுகளுக்கு இடையே இடைவெளியை உருவாக்கி, உள்ளே சிக்கியிருந்த சசி தரூர் உள்ளிட்ட அனைவரையும் எவ்வித காயமின்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

சசி தரூர் பாராட்டு மற்றும் கௌரவிப்பு..

மீட்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், "அரை மணி நேரம் லிஃப்டிற்குள் இருந்தது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், அமைச்சரைச் சந்திக்கும் அப்பாயிண்ட்மென்ட் உட்பட எனது அடுத்தடுத்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இதனால் தாமதமாகிவிட்டது" என்று கூறினார்.

இருப்பினும், தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே வந்து, அதீத திறமையுடன் தங்களை மீட்ட கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் வேகமான செயல்பாட்டை சசி தரூர் பாராட்டினார். தொடர்ந்து, தான் கலந்துகொண்ட ரோட்டரி கிளப் மேடையிலேயே, தன்னை மீட்ட தீயணைப்பு வீரர்களை நேரில் அழைத்து அவர்களுக்குப் பொதுவெளியில் சசி தரூர் எம்பி நன்றி கூறி கௌரவித்தார்.